Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

திமுக ஆட்சி அமைந்ததும் கல்வி, விவசாய கடன்கள் ரத்து வேலூரில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

வேலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்ட அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின். (அடுத்த படம்) கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள். படங்கள்: வி.எம்.மணிநாதன்

வேலூர்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி மற்றும் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தநேரி கிராமத்தில் நேற்று காலை நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு பெட்டியில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பெட்டியை நானே திறப்பேன் என்று கூறிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசும்போது, ‘‘ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து மனுக்களுடன் வந்துள்ளீர்கள். அடுத்தவர் நம்பிக்கையை பெறுவது என்பது ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன். மக்கள் குறைகளை அறியும் இந்த பயணத்தை தொடங்கியுள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்ததும்100 நாட்களில் மக்கள் குறைகளை தீர்ப்பேன். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் தனி இலாகா உருவாக்கப்படும். அந்த துறையின் மூலம் மாவட்டம் வாரியாக குறைகளை பரிசீலித்து தீர்வு காணப்படும். அதிமுக அரசு நிறைவேற்ற தவறிய கடமையை திமுக நிச்சயம் நிறைவேற்றும். இதன்மூலம் ஒரு கோடி மக்களின் பிரச்சினை தீரும். ஒரு கோடி குடும்பங்கள் கவலைகளில் இருந்து நிச்சயமாக மீண்டிருப்பார்கள்.

கார்பரேட் கம்பெனிக்கு பல லட்சம் கோடி கடன் ரத்து செய்யும் மத்திய அரசு, அப்பாவி மக்களின் கடனை ரத்து செய்யும்போது மட்டும் கேள்வி கேட்கிறார்கள். ஏழைகளுக்கு செய்வது கடன் ரத்து இல்லை. அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் திட்டம். இதை திமுக அரசு செய்யும்’’ என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தபோது, ‘‘திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக்கடன், விவசாய கடன் ரத்து செய்யப்படும். ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு பெறப்படும். அமைச்சர் வீரமணி வீட்டிலும், அவரது பினாமிகள் வீடுகள் உள்ளிட்ட 31 இடத்தில் வருமான வரி சோதனை நடந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x