Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

நான் எம்ஜிஆரின் பரம ரசிகன் ஆவேன் எடப்பாடியில் மு.க.ஸ்டாலின் தகவல்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அடுத்த குருமப்பட்டியில் நேற்று நடந்த திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

நான் எம்ஜிஆரின் பரம ரசிகன் என எடப்பாடி அருகே நடந்த திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அடுத்த குருமப்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நான் இதுவரைக்கும் 25 கூட்டங்கள் வரை பங்கேற்று உள்ளேன் அதில் இந்த கிராம சபைக்குதான் முதல் மதிப்பெண். முதல்வர் பழனிச்சாமி உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் ஆனால், இங்கு 9,600 பேர் வேலை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

எம்ஜிஆர் தான் கருணாநிதியை முதல்வராக்கினார் என முதல்வர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். பராசக்தியில் சிவாஜியை அறிமுகப்படுத்தியதுபோல, மந்திரிகுமாரியில் எம்ஜிஆரை நடிகராக உருவாக்கியவர் கருணாநிதிதான். சட்டப்பேரவையில் பேசிய எம்ஜிஆர், தன்னுடைய தலைவர் கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார.

நான் எம்ஜிஆரின் பரம ரசிகன். அவரது சினிமா வெளியாகும்போது பள்ளிக்கு செல்லாமல் சினிமாவுக்கு சென்றவன். முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் உண்மை கண்டறியப்படவில்லை முதல்வர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை. வரும் 27-ம் தேதி சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி முடியப் போகிறது என்றார்.

முன்னதாக, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பலர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் ஆட்சியின் சாதனைகளை கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் ஆனால் திமுகவை கொச்சைப்படுத்தி பேசுவதை தான் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறி இருந்தேன். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அளிக்கும் ஆதரவை பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x