Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் விற்க தடை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை

தமிழகத்தில் பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் விற்பனை செய்ய உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

முந்திரி தோலில் இருந்து எடுக்கப்படும் திரவம் சமையல் எண்ணெய்யில் கலக்கப்படுகிறது. இந்த கலப்பட எண்ணெய்யால் நுகர்வோருக்கு கல்லீரல் பாதிப்பு, புற்று நோய் ஏற்படுகின்றன. சமையல் எண்ணெய்யை சட்டப்படி பேக்கிங் செய்யாமல் சில்லைறையில் விற்பனை செய்யக்கூடாது.

எனவே கலப்பட எண்ணெய் விற்பனைக்குத் தடை விதித்து, உணவு பாதுகாப்பு சட்டப்படி சமையல் எண்ணெய் விற்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன் வாதிடுகையில், மதுரை நகரில் மட்டும் 5,000 கடைகளில் கலப்பட எண்ணெய் விற்கப்படுகிறது. இது தவிர மதுரை புறநகர் பகுதிகளில் 10 ஆயிரம் கடைகளில் கலப்பட சமையல் எண்ணெய் விற்கப்படுகிறது என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், மதுரையில் கடந்த 3 மாதத்தில் 230 எண்ணெய் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் 194 மாதிரிகளின் ஆய்வு அறிக்கை வந்துள்ளது. 51 மாதிரிகள் பாதுகாப்பற்றதாகவும், 88 மாதிரிகள் தரமற்றதாகவும், 55 மாதிரிகள் மட்டும் தரமானதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒவ்வொருவரும் சுகாதாரமான உணவு உட்கொள்வது என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதனால் ஒவ்வொருவருக்கும் கலப்படம் இல்லாமல் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது அரசுகளின் கடமை. இதற்காகவே உணவு பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

கலப்பட சமையல் எண்ணெய் உடல் நலனைக் கெடுப்பதுடன் இறப்பையும் விளைவிக்கும். கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் எண்ணெய் கலப்படத்தை தடுக்க முடியாது. எனவே, பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் விற்பனைக் குத் தடை விதிக்கப்படுகிறது.

தமிழ் திரையுலகைக் காப்பாற்ற திருட்டு சிடி தயாரிப்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வந்ததுபோல், சமையல் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

கலப்பட எண்ணெய்யால் நுகர் வோருக்கு என்னென்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படும்?

மாவட்டம் வாரியாக எண் ணெய் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது? ஆகியவை தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜன.18-க்கு ஒத்திவைக்கப் படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x