Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM
கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களைத்தான் அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 11 இளநிலைப் பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல்அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலைப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்பு வரவில்லை.
அதுகுறித்து விசாரித்தபோது இளநிலைப் பொறியாளர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வாய்ப்பு பறிபோகிறது
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு கல்வித் தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல.கீழ்நிலை பணிகளில் உயர் கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதிபெற்றோருக்கு உரிய வாய்ப்புகிடைப்பதில்லை. இவர்களுக் கான வாய்ப்பு பறிபோகும் நிலைஉள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
பணிகள் பாதிப்பு
சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித் தகுதியை பார்க்கும்போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித் தகுதி கொண்ட இவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது.
எனவே, கீழ்நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்களை நியமிப்பதைத் தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமைச் செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.
மனுதாரர் இளநிலைப் பொறியாளர் பணிக்குரிய கல்வித் தகுதியை பெறவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT