Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரியில் அதிக ஈரப்பதம் காரணமாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுஉள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம், நாளொன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈரமான நிலக்கரி
தூத்துக்குடியில் கடந்த மாதம் 16-ம் தேதி பகலில் சுமார் 5 மணிநேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் அனல்மின் நிலையத்தில் சேமித்து வைத்திருந்த நிலக்கரிமுழுவதும் தண்ணீரில் நனைந்துஈரமானது. இதனால் எரிபொருளாக அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலக்கரியுடன் பர்னஸ் ஆயிலை கலந்து அனல்மின் நிலைய அலகுகளை இயக்கினர்.கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் நிலக்கரி மேலும் ஈரமானது. தொடர்ந்து பர்னஸ் ஆயிலை பயன்படுத்தினால் அதிகம் செலவாகும் என்பதால், அனல்மின் நிலையத்தில் ஒவ்வொரு அலகாக படிப்படியாக நிறுத்தப்பட்டது. நேற்று ஒட்டுமொத்தமாக 5 அலகுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க மேட்டூர் உள்ளிட்ட மற்ற இடங்களில் உள்ள அனல்மின் நிலையங்களின் அனைத்து அலகுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT