Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சேலத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சேலம்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கந்தாஸ்ரமம் அருகே உள்ள எஸ்ஆர்பி மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏழை தாயின் மகன் என கூறிக்கொள்ளும் பிரதமர், ஏழை விவசாயிகள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது ஏன்?. வானொலியில் பேசும் பிரதமர்மோடி, விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை வழங்கப்படும் என்கிறார். ஆனால், சட்டத்தில் அதை குறிப்பிட்டுள்ளாரா?

95 சதவீதம் சிறு,குறு, நடுத்தர விவசாயிகள் உள்ள நாட்டில், விவசாயிகளை பாதிக்கும் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆதரவு தெரிவிக்கிறார்.

அதிமுக ஆட்சியில் நடந்து வரும்ஊழலை மறைக்க 2ஜி ஊழலை கூறி வீண் பழி போடுகிறார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள்மத்திய அமைச்சர் ராசா பதில் அளித்தும், நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்து 3 நாட்களாகியும், முதல்வர் மவுனம் சாதிக்கிறார்.

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழகசட்டப்பேரவையை கூட்டி முதல்வர் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அவர் தப்பிக்கலாம்.

விவசாயிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், திமுகதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சேலம் மேற்கு மாவட்டபொறுப்பாளர் டிஎம் செல்வகணபதி, மாநகர மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, எம்பி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து, சங்ககிரி, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட ஊர்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு மயிலாடுதுறையிலும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருதிருச்சியிலும், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லிலும், க.பொன்முடி திருவண்ணாமலையிலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டிலும், ஆ.ராசாநீலகிரியிலும், அந்தியூர் ப.செல்வராஜ் நாமக்கல்லிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அயப்பாக்கத்தில் எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே எம்பிதயாநிதிமாறன்,பி.கே.சேகர்பாபு, செங்குன்றத்தில் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே திருவாரூர், நாகப்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x