Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

கரோனா காலத்தில் சுய உதவிக் குழுக்கள் புறக்கணிப்பு: அரசு மீது கனிமொழி புகார்

சேலம்: கரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுவை தமிழக அரசு புறக்கணிப்பதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி , ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கொங்கணாபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், விவசாயிகள், நங்கவள்ளியில் பட்டு நெசவாளர்கள், இருப்பாளியில் பனையேறும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாகவும் கரோனா காலத்தில் அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும், கடனுக்குரிய தவணைகள் தவறாமல் வசூலிக்கப்பட்டதாகவும் மகளிர் குழுவினர் தெரிவித்தனர்.

பெண்கள் பெற்ற சிறு கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு இதுவரை நீதி வழங்கவில்லை. தன்னை விவசாயி என கூறும் முதல்வர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை வரவேற்றிருப்பது அவமானம். கேரளாவில் பெட்ரோலிய குழாய்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதுபோல இங்கு செயல்படுத்த தமிழக அரசுக்கு துணிவில்லை. இவ்வாறு அவர் கூறினார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x