Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
காளையார்கோவில் பல்லூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ராஜா அரசு பள்ளி ஆசிரியராகவும், அவரது மகன் அரசு மருத்துவராகவும் உள்ளனர்.
இதை மறைத்து அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கியுள்ளதால், அதை ரத்து செய்துள்ளோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இருவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி ராஜா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மனுதாரரும், அவரது மகனும் அரசு ஊழியர்களாக இருப்பதை மறைத்து அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினர் பெயரில் 5 பட்டாக்கள் பெற்றுள்ளனர்.
இது நீதிமன்றத்துக்கு தெரியவந்ததும் வழக்கை திரும்பப் பெறுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை மனுதாரர் குடும்பம் ஏமாற்றி பெற்றுள்ளது.
இந்த வழக்கில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை செயலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைஇயக்குநர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த5 பேருக்கு எப்படி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து வட்டாட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் எத்தனை பேர் இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றுள்ளனர் என்பது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி அரசின் சலுகைகளை பெற்ற அரசு ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நவ.30-ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT