Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக்கடன் செய்த - ஜமீன்தார் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு :

சிவகங்கை அருகே படமாத்தூர் சித்தாலங்குடியில் உள்ள மகாராஜா கோயிலில் கண்டறியப்பட்ட 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டு.

சிவகங்கை

சிவகங்கை அருகே வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக்கடன் செய்த 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இக்கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த தொல்லி யல் ஆர்வலர் புலவர் கா.காளிராசா, பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் புலவர் கா.காளிராசா கூறியதாவது:

படமாத்தூர் சித்தாலங்குடியில் மகாராஜா கோயில் உள்ளது. இங்குள்ள தெய்வம் சிவகங்கையை ஆண்ட ஜமீன் கவுரி வல்லப உடையண ராஜா (1801-1828) (அ) அவரது மூதாதையராக இருக்கலாம். அணிகலன்கள், தலைப்பாகையுடன் குதிரை மேல் அமர்ந் திருக்கும் வீரனின் சிலை கம்பீரமாக காட்சி தருகிறது.

இதேபோன்ற சிலையுடன் சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலும் மகாராஜா கோயில் உள்ளது. படமாத்தூர் சித்தாலங்குடியில் உள்ள தெய்வத்தை சிவகங்கை அரண்மனையினர் குல சாமியாக வணங்குகின்றனர்.

அதேபோல், மக்களும் தங்களது காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

கோயில் திருச்சுற்று மதிலில் கல்வெட்டு

கோயில் சுற்றுச்சுவரில் வடக்குப் பகுதியில் அடியில் 9 வரிகளைக் கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் 1861-ம் ஆண்டு துன்மதி வருஷம் வைகாசி மாதம் 26-ம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும்போது, படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்துகொண்ட பிரார்த்தனையின் படிக்கு புலியை சுட்டுக் குத்தினதுனாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.

கல்வெட்டில் உள்ள காலத்தைக்கொண்டு பார்க்கும்போது, அதில் இடம் பெற்றுள்ளவர் சிவகங்கை 5-வது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848-1865) என உறுதி செய்ய முடிகிறது. மேலும் இவர் தான் 160 ஆண்டுகள் பழமையான சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியை தோற்றுவித்துள்ளார். இவரது சிலை சிவகங்கை அருங்காட்சியகத்திலும் உள்ளது.

சிவகங்கையாக மருவிய செவ்வேங்கை

சிவகங்கையின் பழமையான பெயர் செவ்வேங்கை என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் சிவந்த மண்ணில் வேங்கை மரம் நிறைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பர்.

சிவந்த வேங்கைப்புலிகள் நிறைந்த பகுதியாக இருந்த செவ்வேங்கை பகுதி பின்னாளில் சிவகங்கை பகுதியாகவும் மாறியிருக்கலாம்.

புலிகள் நிரம்பிய காட்டுப் பகுதி

சிவகங்கையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் தஞ்சை செல்லும்போது புலியை அடக்கியதாகவும், பின்னாளில் மருது சகோதரர்கள் புலியை அடக்கியதாகவும் செய்தி உண்டு. மேலும் மற்றொரு மன்னர் புலியை வீழ்த்தி இருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது, என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x