Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

பட்டாசு விபத்துகளில் இருந்து கண்களைக் காப்பது எப்படி? : நாமக்கல் கண் மருத்துவர் ஆலோசனை

நாமக்கல்

தீபாவளியின் உற்சாகமே பட்டாசு வெடிப்பதில்தான் நிறைந்துள்ளது. குழந்தைகளில் தொடங்கி பெண்கள், முதியோர் வரை குறைந்தபட்சம் ஒரு கம்பி மத்தாப்பாவது பிடித்து தீபாவளியைக் கொண்டாடும் மகிழ்ச்சியான தருணம், தீபாவளியின் போது மட்டுமே கிடைக்கும். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகளில், 40 சதவீதத்திற்கு அதிகமானவர்கள், கண்களில் காயம் ஏற்பட்டு பாதிப்பு அடைகின்றனர். இவற்றைத் தவிர்த்து, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது கண்கள் பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் நாமக்கல் கண் மருத்துவர் பி.ரங்கநாதன் வழங்கும் யோசனைகள்:

** பட்டாசு வெடித்து கண்ணில் அடிபட்டால், கண் மற்றும் உடலில் உள்ள தீக்காய பகுதிகளை உடனடியாக சுத்தமான தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். தாமதமில்லாமல் அருகில் உள்ள கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும்.

** காயம்பட்ட கண்ணை அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் ஊற்றக்கூடாது. இவ்வாறு மருந்தினை பயன்படுத்தினால், பார்வையிழப்பு வரை ஏற்பட வாய்ப்புள்ளது.

** குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவர்கள் பட்டாசை தொட்டு விட்டு கண்ணை தேய்க்கும் போது, அதில் உள்ள வெடி மருந்து கண்ணில் பட்டு கண் உறுத்தல் ஏற்படும். அப்படி உறுத்தல் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரால் கழுவலாம்.இதை தவிர்க்க, பட்டாசு வெடித்து முடித்தவுடன் குழந்தைகளை கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்

** மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை கண்களைப் பாதிக்கும். அவ்வகைப் பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்புக்காக கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

** பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்களுக்கும், முதியோர், குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

அதில் உள்ள பாஸ்பரஸ், நைட்ரேட், கண்களை பாதிக்கும். காரியம் மூளை பதிப்பையும், தாமிரம் மற்றும் சல்பர் ஆகியவற்றால் சுவாச பதிப்பும் மற்றும் காட்மியம் சிறுநீரக பதிப்பையும் ஏற்படுத்துகிறது.

** ராக்கெட் மற்றும் அணுகுண்டு போன்ற பெரிய வெடிகளால் விபத்து ஏற்படும்போது, கண்ணின் கருவிழியில் தீக்காயம், கண் விழி கிழிதல், விழித்திரை பிரிதல், கண் நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வகை பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.

** பட்டாசு விபத்தின்போது ஏற்படும் காயங்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியும் பெறலாம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x