Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி குப்பைக்கு தீயிட்டு கொளுத்தி, புகை மண்டலத்தை உருவாக்கி, சுகாதார சீர்கேட்டை அரங்கேற்றுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் சாலையில் இருந்து சற்று தொலைவில் கரபுரநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் எதிரே சேலம்- கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கான உயர்மட்ட பாலம் உள்ளது. கீழே செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக திருமணிமுத்தாறு செல்கிறது. ஆற்றின் கரையோரப்பகுதியில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளையும், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கழிவுகளையும் கொட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பெங்களூரு, சென்னை, திருச்சி மார்க்கத்தில் இருந்து கோவை, கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் சேலம் - கோவை நெடுஞ்சாலையில் பயணித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை தினமும் கொட்டி, சுகாதார சீர்கேட்டை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அடிக்கடி குப்பைக்கு தீயிட்டு கொளுத்தி எரியூட்டிச் செல்வதும் உண்டு. தீ பற்றி எரிந்து நச்சு வாயுவை ஏற்படுத்தி, வாகனங்களில் பயணிப்போருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்கள் பலரும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படும் அவலமும் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பையை கொட்டி, தீ மூட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT