Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM
தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தெரிவித்தார்.
கொற்கை பகுதியில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை நேற்று ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழக தொல்லியல் ஆய்வு களில் கொற்கை அகழாய்வு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பாண்டியர்களின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கையில் 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்ட அகழாய்வுகள் நடை பெற்றாலும், தற்போது பல முக்கிய பொருட்கள் கிடைத்து ள்ளன. ரோம், எகிப்து, சீனா போன்ற நாடுகளுடன் கொற்கைக்கு இருந்த தொடர்புகள் தெரியவந்துள்ளன. கங்கை சமவெளியைச் சேர்ந்த பளபளப்பான கருப்பு பானை ஓடுகள் இங்கே கிடைத்திருப்பது மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.
கிறிஸ்து பிறப்புக்கு 785 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு செழுமையான நாகரிகம் இருந்திருக் கிறது. பல கட்டுமா ங்கள், வடி குழாய்கள், சுடுமண் ஓடுகள், சங்கு வளையல்கள், சங்கு பொருட்கள், இரும்பினால் செய்ய ப்பட்ட பொருட்கள், காசுகள், தமிழீ எழுத்துக்கள், பானை ஓடுகள் என பல பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைக்கால தமிழின வரலாற்றில் முக்கிய இடமாக உள்ள கொற்கையில் இந்த அகழாய்வு புது வெளிச்சத்தை பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.
கொற்கையில் கடல்சார் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். கடல்சார் அகழாய்வுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் தேவை. அதற்கான ஆய்வுகளும், ஆலோசனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. வல்லுநர்களோடு தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர். அதனை இறுதி செய்த பிறகு, நிச்சயமாக இங்கே கடல்சார்ந்த ஆய்வுகள் தொடங்கப்படும்.
நெல்லையில் அமையவுள்ள `பொருநை நாகரீகம்’ அருங்காட்சியகத்தில் கொற்கை முக்கிய இடம் பெறும். இங்கே கள அருங்காட்சியம் அமைப்பது குறித்து பின்னர் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். கொற்கையில் அதிக இடங்களில் அகழாய்வு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், இங்கே குடியிருப்புகள் இருப்பதால் சிரமங்கள் உள்ளன. இங்கு அகழாய்வு செய்ய கூடுதல் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அமைச்சர்.
சிவகளையில் கண்காட்சி
தொடர்ந்து நேற்று மாலையில், சிவகளை பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணிகளைஅமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், அகழாய்வு கள இயக்குநர் தங்கத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.சிவகளையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 3,200 ஆண்டுகள் பழமையான நெல்மணிகள் இருந்த முதுமக்கள் தாழிகள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கிராம மக்கள், மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சிவகளை வரலாற்று ஆசிரியர் ஆ.மாணிக்கம், தொல்லியல் துறை பணியாளர் சுதாகர் ஆகியோர், பழங்காலப் பொருட்கள் குறித்து பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT