Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் இன்று பதவியேற்பு : பாதுகாப்பு பணியில் 1,150 காவலர்கள்

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இன்று பதவியேற்க உள்ள நிலையில் சுமார் 1,150 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி எண்ணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 14 கவுன்சிலர்கள், 7 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 245 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 2,070 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 13 கவுன்சிலர்கள், 127 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 288 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றிபெற்றவர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சி லர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ளனர். அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள், அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஒரு சில இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டையில் உள்ள பாரதி நகரில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்படவுள்ளது. அங்கு இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ளனர். அதேபோல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையாக இன்று நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன் மேற்பார்வையில் 550 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வ குமர் மேற்பார்வையில் 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x