Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து குஜராத் செல்லும் போலீஸாரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு விருதுநகர், மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறை சார்பில் கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து குஜராத் மாநிலம் கவேடியா மாவட்டத்தில் நர்மதா நதிக் கரையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை வரை போலீஸார் மோட்டார் சைக்கிள் பேரணி செல்கின்றனர். வரும் 24-ம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை அடைகின்றனர். அங்கு பிரதமர் தலைமையில் அக்.31-ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை துணை தளவாய் குமார் தலைமையில் 25 வீரர்கள், 16 உதவியாளர்கள் அடங்கிய குழு 25 மோட்டார் சைக்கிள்களில் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கினர்.
இப்பேரணி நேற்று பிற்பகல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தது. அங்கு காவல் கண்காணிப்பாளர் மனோகர் வீரர்களை வரவேற்று வாழ்த்தினார். பின்னர் இப்பேரணி மதுரை திருமங்கலத்துக்கு வந்தது. கப்பலூர் பகுதியில் நான்கு வழிச் சாலையில் மதுரை எஸ்பி பாஸ்கரன் வரவேற்றார். இதில் திருமங்கலம் சரக காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT