Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.7-ல் தொடங் கவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக மகா தேரோட்டம் நவ. 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, நவ. 19-ம் தேதி காலை கோயிலின் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தீபத் திருவிழாவுக்கான பணிகளை கோயில் நிர்வாகம் தொடங்கியது. இதில், மிக முக்கியமானதாக பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை பாது காக்க அமைத்திருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
இதையடுத்து, அண்ணா மலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றிஅமைக்கப்பட்டுள்ள ஃபைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்றதும் 5 தேர்களையும் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது. ஸ்தபதிகளை கொண்டு சிற்பங்களையும், பொறியாளர்களை கொண்டு 5 தேர்களின் சக்கரங்களையும் பழுதுபார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் அலு வலர்கள் கூறும்போது, “கரோனா தடை உத்தரவு காரணமாக, பஞ்ச ரதங்களை கடந்த ஆண்டு சீரமைக்கவில்லை. இந்த ஆண்டு சீரமைக்கத் தொடங்கியுள்ளோம். இதைத்தொடர்ந்து, தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.
கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரண மாக, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஆண்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதனால், மாட வீதியில் சுவாமி வீதியுலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறவில்லை. கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு 2-ம் அலையின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளதால், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித் துள்ளது. அதேபோல், கார்த்திகை தீபத் திருவிழாவையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக் கும் என நம்பிக்கையுடன் காத்தி ருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT