Published : 15 Aug 2021 03:25 AM
Last Updated : 15 Aug 2021 03:25 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் 11 இடங்களில் - இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை :

சேலம் திருமலைநகர் பெருமாள்மலை அடிவாரத்தில் நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் பார்த்திபன்.

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 11 இடங்களில் நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி சுமார் 200 டன் மக்கும் குப்பை சேகரிக்கப்படுகிறது. இக்குப்பையில் இருந்து நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரிக்க மாநகராட்சிப் பகுதியில் தற்போது 28 இடங்களில் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி 10 டன் வீதம் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரிக்க கூடுதலான மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிவதாபுரம், திருமலை நகர், கோம்மைப்பட்டி பிரிவு உயிரியல் பூங்கா அருகில் தலா 1, அரியாகவுண்டன்பட்டி குப்பை மேடு, கிளாக்காடு ஊத்துகிணறு, ராமன் குட்டை ரோடு, மத்திய சிறைச்சாலை பின்புறம் ஆகிய பகுதிகளில் தலா 2 என மொத்தம் 11 இடங்களில் நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மையங்கள் அமைக்கவுள்ள இடங்களை சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருமலை நகர் பகுதியில் நடைபெற்ற ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கழிவு நீர் சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர் நகரமைப்பு பழனிசாமி, உதவி செயற்பொறியாளர்கள் சிபி சக்ரவர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x