Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்காவா? : நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சி

சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்கா மட்டும் அமைக்கப் போவதாக கூறுவது தவறு எனவும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பூனாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் மரங்களுடன்கூடிய குறுங்காட்டில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மேலும் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிகள், நகராட்சிகளை விரிவுபடுத்தவும், புதிய நகராட்சிகள் உருவாக்கவும், ரூ.10 கோடிக்கு வருவாய் உள்ள பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தவும் ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார்.

சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்கா அமைக்கப் போவதாக நான் அறிவித்துள்ளதாகவும், இப்போது அது தேவையா என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அது தவறான தகவல்.அடையாறு, கூவம், பக்கிங்காம்கால்வாய்களை தூய்மைப்படுத்துவதுடன், அவற்றிலுள்ள நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் பயன்படுத்தும் வகையிலும், ஆறுகளில் கொசு உற்பத்தியை குறைப்பதற்காகவும், கரையோரங்களில் பூங்கா அமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டம் தற்போது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இதுகுறித்து திட்ட அறிக்கை தயார் செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் விரிவாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், சீ.கதிரவன், கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x