Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலுக்கு சங்க மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கரோனா தொற்றால் வேலையிழப்பு, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை 40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.3000-மாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனம் உள்ளவர்களுக்குரூ.1,500-ல் இருந்து ரூ.5000-மாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் துணைத் தலைவர் கனகராஜ், பொருளாளர் ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 46 மாற்றுத் திறனாளிகளை கைது செய்தனர்.
குமாரபாளையத்தில் தர்ணா
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார்.போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளதால் இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 40 சதவீதம் ஊனத்திற்கு அதிகபட்சம் ரூ.3,800, தெலங்கானாவில் ரூ.3,016 வழங்குகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர தலைவர் பராசக்தி, நகர துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சசிகலா, செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT