Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM
காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், மக்கள் தாங்களாகவே மருந்து, மாத்திரைகள் வாங்கி, சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
டெங்கு நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
தொடர் மழைக்காலம் என்பதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தாங்களாக மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் வாங்கி, சுய மருத்துவம் மேற்கொள்ளக் கூடாது.
கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தவறாமல் சென்று, ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்குமாறு தேவையற்ற பொருட்கள் இருக்கின்றதா என்பதையும் முழுமையாக ஆய்வு செய்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இப்பணிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு துறை அலுவலர்கள் நேரில் சென்று, சுத்தம் செய்துள்ளதை ஆய்வு செய்வதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT