Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM
திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/ தஞ்சாவூர்
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை பலத்த கனமழை பெய்தது. பின்னர், தொடர்ந்து பரவலாக மழை பெய்துகொண்டே இருந்தது.
இதன் காரணமாக, திருவாரூர் அருகே பெருங்குடி, வெண்ணவாசல், கானூர், மாங்குடி, கள்ளிக்குடி, கமலாபுரம், குளிக்கரை, அம்மையப்பன், கொரடாச்சேரி, பனங்குடி, ஆண்டிப்பந்தல், தூத்துக்குடி உள்ளிட்ட கிராமங்களிலும், குடவாசல், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களிலும் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், தண்ணீர் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): குடவாசல் 27, திருவாரூர் 15.6, வலங்கைமான் 16.4, மன்னார்குடி 9, நீடாமங்கலம் 7.8, நன்னிலம் 11.6, திருத்துறைப்பூண்டி 5.
நாகை, மயிலாடுதுறையில்...
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை மழை பெய்த நிலையில், மதியம் 12 மணியளவில் மழை நின்றது. இதன் காரணமாக நாகை, திருமருகல், வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்களை சூழ்ந்திருந்த மழைநீர் வடியத் தொடங்கியது. அதேநேரம், வேளாங்கண்ணியில் கடற்கரையோரம் பயிரிடப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இந்த மழைக்கு 2 ஆடுகள் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து, நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.நாகை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): நாகப்பட்டினம் 14.90, கீழ்வேளூர் 7.40, தலைஞாயிறு 8.20, வேதாரண்யம் 3.60. திருக்குவளையில் மழை இல்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): மயிலாடுதுறை 19 மி.மீ, மணல்மேடு 22 மி.மீ, சீர்காழி 31மி.மீ, கொள்ளிடம் 28.40 மி.மீ, தரங்கம்பாடி 31 மி.மீ. குத்தாலம் பகுதியில் மழை இல்லை.
தொடர்பு எண்கள்
மழை மற்றும் வெள்ளம் தொடர்பான பாதிப்புகள் குறித்து நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1077, 04365 251992, 8438669800 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1077, 04364 222588 ஆகிய தொலைபேசி எண்களுக்கும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர்கள் அருண் தம்புராஜ்(நாகை), ரா.லலிதா(மயிலாடுதுறை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT