Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணியாகும் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தல்

ராணிப்பேட்டையில் இலவச வீடு கட்டும் பணி ஆணையை பயனாளி ஒருவருக்கு வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் உள்ளிட்டோர்.

ராணிப்பேட்டை

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணியாகும். எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சி பேதமின்றி மக்களுக்கு தேவையான வசதி களை செய்து தர வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர், துணைத்தலை வர், ஒன்றியக்குழுத்தலைவர், துணைத்தலைவர், வார்டு கவுன் சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறிமுகக்கூட்டம் ராணிப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, "தமிழகத்தில் திமுக அரசு அமைந்து 5 மாதங்கள் ஆகிறது. அதற்குள்ளாக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அரசின் செயல்பாடுகள் உள்ளன. இதன் விளைவாக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையாக இதை நாம் பார்க்க வேண்டும்.

கிராமப்பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்முக்கிய பணியாகும். எனவே,உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் கட்சி பேதமின்றி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை அவர்களிடம் கேட்டறிந்து அதை நிறைவேற்றி தர வேண்டும். மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.அதேபோல, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் அயராமல் உழைக்க வேண்டும்.

கிராமப்பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை,புதிய திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரியப்படுத்தி அதை விரைவாக செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியப்பகுதிகளில் ரூ.64.61 லட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டும் பணி ஆணைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முனிரத்தினம் (சோளிங்கர்), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x