Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக 19 வட்டார அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதையடுத்து, அனைத்துத்துறைகளுடன் இயங்கும் வகையில் மருத்துவமனை கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், விருதுநகரில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு மருத்துவப் பணிகள் இயக்குநரால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களிலும் இயங்கிவந்த அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டு, வட்டார அளவில் இயங்கி வந்த அரசு மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, அறந்தாங்கி அரசு மருத்துவமனை புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், குளித்தலை அரசு மருத்துவமனை கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், குன்னூர் அரசு மருத்துவமனை நீலகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், பரமக்குடி அரசு மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், பழநி அரசு மருத்துவமனை திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், தாராபுரம் அரசு மருத்துவமனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், வேதாரண்யம் அரசு மருத்துவமனை நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், திருத்தணி அரசு மருத்துவமனை திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், ஓசூர் அரசு மருத்துவமனை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், தாம்பரம் அரசு மருத்துவமனை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், நாங்குனேரி அரசு மருத்துவமனை திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், திண்டிவனம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், குடியாத்தம் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT