Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, காவிரிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழகத்தின் முக்கிய நீர்ஆதாரமான மேட்டூர் அணை, மொத்தம் 120 அடி கொள்ளளவை கொண்டது. டெல்டா விவசாயத்துக்கு பெரும்பாலும் மேட்டூர் அணை நீரையே விவசாயிகள் நம்பியுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு விடுவிக்கத் தவறுவது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நிரம்புவதும் 100 அடியை எட்டுவதும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகவே இருந்து வருகிறது.
நடப்பாண்டில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மார்ச் 27-ம்தேதி 100 அடியாக இருந்தது. அதன்பின்னர் கோடையில் நீர்வரத்து குறைந்தது. மேலும், கடந்த ஜூன் 12-ம் தேதி முதல்அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், நீர்மட்டம் உயரவில்லை.
இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்ததால், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதேநேரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக விநாடிக்கு 10 ஆயிரம்கனஅடிக்கும் கூடுதலாக நீர்வரத்து இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தமிழக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 39,634 கனஅடியாக உயந்தது. இதனால், ஒரே நாளில் இரண்டரை அடிக்குமேல் உயர்ந்து நேற்று முன்தினம் நீர்மட்டம் 97.80 அடியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 28,650 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 210 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 11 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியைஎட்டியது. நடப்பாண்டில் 2-வதுமுறையாகவும், அணை வரலாற்றில் 67-வது முறையாகவும் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் அணையின் 16 கண் மதகு அருகில் நீரில் மலர்தூவி காவிரி அன்னைக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT