Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM
திருச்சி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். நிகழாண்டு தற்போது நாற்று விடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நாற்றுகள் விடுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லாததால் நாற்று விடும் பணிகள் தாமதப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் த.சங்கிலிமுத்து கூறியது: சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அடியுரம் மற்றும் மேலுரம் ஆகியவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கூட உரங்கள் வழங்கப்படாமல் உள்ளன.
உரிய பருவத்தில் நாற்று விடுதல் மற்றும் நடவுப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், பயிர்கள் வளர்ந்த பிறகு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு, நஷ்டமடையும் அபாயமும் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரத் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமனிடம் கேட்ட போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் இந்த மாதத்தில் ஏறத்தாழ 687 டன் யூரியா உள்ளிட்ட உரங்கள் வரப்பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இன்னும் 300 டன் யூரியா மற்றும் டிஏபி ஓரிரு நாட்களில் வரும் என எதிர்பார்க்கிறோம். இவை வந்தவுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT