Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பது நுண்ணுயிரியல் ஆய்வில் தெரிய வந்துள்ள நிலையில், சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டில் கடந்த சில நாட்களாக டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென உயரத் தொடங்கியது.
இதையடுத்து, அந்த வார்டுக்குட்பட்ட வள்ளுவர் நகர், முஸ்லிம் தெரு, பாண்டியன் தெரு, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 வீடுகள், தெரு குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4 இடங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளிலும், மனிதக் கழிவுகளில் உள்ள கோலி பார்ம் பாக்டீரியா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதன்மூலம் குடிநீருடன் கழிவுநீர் கலந்திருப்பது தெரியவந்தது. மேலும், அந்த ஆய்வறிக்கையில், அந்தக் குடிநீர் மனிதன் குடிப்பதற்கு லாயக்கற்றது என்றும், குடிநீர்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, குளோரினேசன் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் எஸ்.புஷ்பவனம், மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நேற்று அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “மாநகர மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கோலி பார்ம் பாக்டீரியா கலந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், மனிதர்களின் உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைத்து, சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி நகர்நல அலுவலர் எம்.யாழினியிடம் கேட்டபோது, அவர் கூறியது:
காமராஜர் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் உடனடியாக சூப்பர் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் குழாயில் உடைப்பு நேரிட்டு கழிவுநீர் கலக்கிறதா என்று ஆய்வு செய்து, சீரமைக்கும் பணி பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT