Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சிறப்பு முகாமில் 79 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

வேலூர் ஓட்டேரி பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அடுத்த படம்: திருவண்ணாமலை அடுத்த சீலப்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ். அருகில், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5-ம் கட்டமாக நேற்று நடைபெற்ற கரோனா மெகா தடுப்பூசி முகாமில் 79 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியை பொதுமக்கள் தாமாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண் டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் 12-ம் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் நேற்று 1,000 முகாம்களில் நடைபெற்றது. இதில், வேலூர் மாநகராட்சிப்பகுதியில் மட்டும் 300 இடங்களில் தடுப்பூசி முகாம்

நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க காசு, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

வேலூர் ஓட்டேரி பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

இதில், நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 980 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 530 முகாம்கள் அமைக்கப் பட்டடிருந்தன. காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5-ம் கட்ட முகாமில் நேற்று 17 ஆயிரத்து 147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில், 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 485 இடங்களில் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி போன்ற பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார். 5-ம் கட்ட முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து 32 இன்ச் கலர் டிவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட சிறப்பு முகாமில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசி முகாமில் பெட்ரோல் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்காக 1,075 முகாம்கள் அமைக்கப்பட்டன.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி, வாணியங்தாங்கல் ஊராட்சி, துரிஞ்சாபுரம் அடுத்த சீலப்பந்தல் ஊராட்சி, நாயுடுமங்கலம் ஊராட்சி, புதுமல்லவாடி ஊராட்சி, கலசப்பாக்கம் அடுத்த வில்வராயநல்லூர் ஊராட்சி, பாணாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். இதற்கிடையில், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட 50 பேருக்கு தலா 3 கிலோ அரிசி மற்றும் 150 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் இரவு 7 மணி நிலவரப்படி 66,555 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x