Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

கழுநீர்குளம், நாரணபுரத்தில் இரு தரப்பினர் மோதல் : சாலை மறியல், கார் உடைப்பால் பதற்றம்

தென்காசி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சித்தலைவர் பதவிக்கு ஆண்டபெருமாள், கை.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தெற்கு கழுநீர்குளத்தில் 4, 5-வது வார்டு வாக்குச்சாவடிகளில் நேற்று மாலை 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் கொடுத்து, கேட்மூடப்பட்டது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த சுமார் 50 பேர் வாக்களிக்க வரிசையில் நின்றனர்.

இந்நிலையில், கள்ள ஓட்டு போடுவதற்காக கேட் மூடப்பட்டுள்ளதாக ஆண்டபெருமாள் தரப்பினர் குற்றஞ்சாட்டி தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு கழுநீர்குளத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் தெற்கு கழுநீர்குளம் கிராமத்துக்குச் சென்றனர். தெற்குகழுநீர்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (45) என்பவரை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த இசக்கிமுத்து, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு கழுநீர்குளத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் ஆலங்குளம்- சுரண்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒன்றரைமணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், ஆலங்குளம் ஒன்றியம் நாரணபுரம் ஊராட்சித் தலைவர்பதவிக்கு செல்வி, சண்முகத்தாய் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாரணபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணி வரை வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு, கேட் மூடப்பட்டது. இதனால், அங்கு கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக வதந்தி பரவியுள்ளது. இதனால், செல்வியின் கணவர் மணிமாறன் காரில் தனது ஆதரவாளர்களுடன் நாரணபுரம் வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது, மர்ம நபர்கள்கற்களை மணிமாறன் சென்ற கார் மீது வீசியுள்ளனர். இதில், கார் கண்ணாடி உடைந்தது. இதனால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எஸ்பி கிருஷ்ணராஜ் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x