Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஓராண்டுக்குப்பின் நேற்று நேரடியாக நடந்தது. ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:
விவசாயிகளிடம் பயிர்க்கடனுக்காக பெற்ற நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். நடப்பாண்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், விவசாயிகளிடம் பெற்ற நகைகளை விரைவில் ஒப்படைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான உழவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் உடனடியாக வழங்கி, நகைகளை உடனடியாக திருப்பித்தர வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக 34,512 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 12,000 பேர் மட்டும் பயிர்க்கடனை தள்ளுபடி பெற தகுதியுள்ளவர்களாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள அனைவரையும் சேர்க்க வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் அமராவதி உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது. இதைத்தடுத்து உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பல ஆண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தட்டுப்பாடு உள்ளது. யூரியா வேண்டுமென்றால் உர இடுபொருட்களை வாங்கவேண்டும் என உரக்கடைக்காரர்கள் நிர்பந்திக்கின்றனர். பொங்கலூர், அவிநாசிபாளையம் என பல்வேறு பகுதிகளில் இந்நிலை நீடிக்கிறது. இதுதொடர்பாக வேளாண் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய அமராவதி வாய்க்கால்கள் மண் வாய்க்கால்களாக உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதால், போர்க்கால அடிப்படையில் அவற்றை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT