Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM
அரசின் அனுமதியில்லாமல் முறை கேடாக விசைத்தறியில் பட்டு நெசவு நெய்பவர்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி பட்டு நெசவாளர்கள் மனு அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி பட்டு நெசவு தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைத்தறி பட்டு நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். நாங்கள் வீடுகளில் தறிக் கூடங்களை அமைத்து கைத்தறி பட்டு நெசவு செய்து விற்பனை செய்து வருகிறோம்.
எங்கள் தொழிலை பாதுகாக்கும் வகையில் கைத்தறிக்கு என்று பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை துணிகள், பெட்ஷீட், ஜமக்காளம் என 11 வகையான ரகங்கள் விசைத் தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் விசைத்தறியை பயன்படுத்தி சட்ட விரோதமாக அனுமதியின்றி கைத்தறி பட்டு நெசவு துணிகளை தயார் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதனை பெற்றுச் செல்லும் வியாபாரிகள் கைத்தறி நெசவு பட்டு துணிகள் என பொதுமக்களிடம் கூறி விற்பனை செய்கின்றனர்.
இதனால், பாரம்பரிய கைத்தறி நெசவு பட்டுத் துணிகளின் தரம் குறைவதோடு, அதனை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ் வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, விசைத்தறியில் பட்டு நெசவு நெய்தால் அரசின் இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று பெற்ற பின்னரே அவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், அனுமதியின்றி விசைத்தறி நெசவு இயந்திரம் மூலமாக பட்டாடைகளை நெசவு செய்பவர்கள் மற்றும் அதனை பெற்றுச் செல்லும் வியாபாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT