Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம்’ நாளை (20-ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “வடகிழக்கு பருவ மழையை எதிர் நோக்கி தமிழகம் உள்ளது. மழை காலத்தில் குடியிருப்பு பகுதிகள், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. அதிகம் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
பருவமழையால் ஏற்படும் இடர் பாடுகளை தவிர்க்க, நாளை (20-ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்’ நடைபெற உள்ளது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விடுப்பில் செல்லக்கூடாது
வடிகால்களில் படிந்துள்ள கழிவுகளை அகற்றியதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். வடிகால் மீது உள்ள ஆக்கிரமிப்பை, முதல்நாளே அகற்ற வேண்டும். சிறு பாலங் களில் உள்ள மின்சாரம், தொலைபேசி வயர்களை மாற்றியமைக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் 100 மீட்டர் இடைவெளியில் கம்பி வலை அமைக்க வேண்டும். வடிகால் இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து இணைக்க வேண்டும். திடக்கழிவு, கட்டிட கழிவு, செடி, கொடி புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும். வீதிகளில் குவிந்துள்ள திடக்கழிவு களை அகற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், தாழ் வானப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடிந்ததும் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பணியை புகைப்படம் எடுத்து, உரிய படிவங்கள் மூலமாக ஊரக வளர்ச்சி இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக் குநர் ஆகியோருக்கு மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும். குடிநீர் குழாயில் கசிவு மற்றும் தெருவிளக்கு எரியாமல் இருந்தால் சீரமைக்க வேண்டும்” என்றார். இதில், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT