Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் : கடலூரில் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மஞ்சக்குப்பத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 104- வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் அவரது நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

இளம் வயதிலேயே சமுதாயப் பணிகளில் நாட்டம் கொண்டிருந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, நாடு விடுதலை பெற அரும்பாடுபட்டவர். நாடு விடுதலை அடைந்த பின்னர் 1952-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் சார்பில் 19 வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்ட எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 1954-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராகப் பணிபுரிந்தவர். 1980 மற்றும் 1984-ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றினார்.

மிகவும் சமயோசிதமாகவும் அதே நேரம் தன் கருத்தை ஆணித்தரமாகவும் பேசுவதில் வல்லவராக திகழ்ந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித் தார். மேலும், எஸ்.எஸ்.இராமசாமி படையாட் சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்கள் வழங்கப் படவுள்ளன என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பாபு, பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x