Published : 05 Sep 2021 03:18 AM
Last Updated : 05 Sep 2021 03:18 AM
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 208 கிராம ஊராட்சி தலைவர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக, கெஜல்நாயக்கன் பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி, நாட்றாம்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜோலார்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மேற் கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் கட்டிடங்கள் பழுது ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2,220 ஊராட்சி வார்டு உறுப்பினர், 288 கிராம ஊராட்சி தலைவர், 127 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், காவேரிப் பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், தேர் தலில் பயன்படுத்த உள்ள வாக்குப் பெட்டிகள் சரியாக உள்ளதா? என் பதையும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT