Published : 01 Sep 2021 03:19 AM
Last Updated : 01 Sep 2021 03:19 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 329 பள்ளிகள் இன்று (செப்.1) திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று (செப்.1) திறக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகளை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக தூய்மைப்பணிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் 111 உயர்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 329 பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் 2 கட்டமாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தேசியஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒருநாளும், 9,11-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு நாளும் வருகை தரஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்படவுள்ளனர். மாணவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது முழுமையாக கண்காணிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக பள்ளி வாகனங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாணவர்களுக்கு தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராமசாமி நேற்று ஆய்வு செய்தார். பள்ளிகள் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க கன்னியாகுமரியில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தியும் பள்ளிகளில் ஆய்வு செய்தார். கரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து வருகிறது. எனவே, கேரளா மற்றும் கேரள எல்லை பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தடை விதித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் நெகட்டீவ் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT