Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

பொதுமக்களிடம் கடுமையாக நடக்கக்கூடாது : காவல் துறையினருக்கு தூத்துக்குடி எஸ்பி அறிவுரை

தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 காவல்துணை கோட்டங்களில் உள்ளஅனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரைஅனைவரும் ஒவ்வொரு வாரமும்செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் உட்கோட்ட தலைமையிடங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தூத்துக்குடி நகரதுணை கோட்ட காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் ரோச் பூங்காவில் நடைபெற்றது. பயிற்சியை எஸ்பி பார்வையிட்டு, காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது: பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும். சட்டத்தையும், அரசு விதிமுறைகளையும் கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பொதுமக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து செயல்படவேண்டும்.

பொதுமக்களுக்கு நம்மால் இயன்ற அளவுக்கு உதவிகள் செய்து அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும். பணியில் சிரமங்கள் மற்றும் குறைகள் இருந்தால் உயரதிகாரிகளிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் தவறு செய்தால் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.

பயிற்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம்,தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் மற்றும் குற்றப்பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x