Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் - தரக்கட்டுப்பாடு பயிற்சி முகாம் :

கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாடு குறித்த பயிற்சி முகாமில் கையேட்டை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் என்.வி.சுஜாத்குமார் வெளியிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன் தர உறுதிப்பாடு மற்றும் மேலாண்மைத் துறை சாா்பில், தேசிய மீன்வள வளர்ச்சி வாரிய நிதியுதவியுடன் ‘கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாடு' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் என்.வி.சுஜாத்குமாா் தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.

ஏற்றுமதி ஆய்வு நிறுவன உதவி இயக்குநர் கே.எம்.சுவப்னா ‘சா்வதேச அளவில் இந்திய உணவின் தரப் பிரச்சினைகள்' குறித்துப் பேசினார். முகாமில் மீன் தர உறுதிப்பாடு மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர்ஜெய ஷகிலா, உதவி பேராசிரியர்கள் ஷாலினி, சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடித் துறைமுகத்தில் தரக்கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை, மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் ஆய்வக சோதனை மற்றும் இந்தியாவின் மீன் தர உறுதிப்பாட்டுக்கான சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

டோரி மீட்டா் கொண்டு மீன்களின் தரம் கண்டறிதல் மற்றும் துரித கருவியைக் கொண்டு மீன்களில் கலப்படமாக சேர்க்கப்பட்ட பார்மலினை கண்டறிதல் ஆகியவை குறித்துசெயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மீன்பதனிடும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், மீன்வளத்துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x