Published : 27 Aug 2021 03:13 AM
Last Updated : 27 Aug 2021 03:13 AM
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மாளிகைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் ராஜேஷ் (34). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு பகுதியைச் சேர்ந்த சாமிவேல் மகள் துர்காதேவிக்கும்(27) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரிஷ் (4) மற்றும் ஒன்றரை வயதில் கபிலேஷ் என இரு மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துர்காதேவி வீட்டில் தூக்கிட்டுக்கொண்டதாக, அவரது பெற்றோருக்கு தொலைபேசியில் ராஜேஷ் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, மாளிகைக்காடு வந்த துர்காதேவியின் சகோதரர், தனது சகோதரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், துர்காதேவியின் சடலத்தை அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, ராஜேஷிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு குவிந்த துர்காதேவியின் உறவினர்கள், இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூராய்வு பரிசோதனையை விரைந்து முடித்து சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT