Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு வலசை வந்த பட்டாம்பூச்சிகள் வலசையை முன்கூட்டியே முடித்துக் கொண்டு மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி புறப்பட்டுள்ளன என சேலம் இயற்கை கழகத்தினர் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பாலமலை, பச்சை மலைஉள்ளிட்டவைகள் உள்ளன. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து பட்டாம்பூச்சிகள் வலசை புறப்பட்டு கிழக்கு தொடர்ச்சி மலைக்கு வரும். பின்னர் அவை வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும்.
தற்போது, வலசை வந்த பட்டாம்பூச்சிகள் முன்கூட்டியே தங்கள் வலசையை முடித்துக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைக்கு புறப்படத் தொடங்கியுள்ளன என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சேலம் இயற்கை கழகத்தைச் சேர்ந்த கோகுல் கூறியதாவது:
சேலம் மாவட்ட மலைப்பகுதிக்கு பட்டாம்பூச்சிகள் வலசைவருவதை பட்டாம்பூச்சி ஆர்வலர்களான சேலம் இளவரசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் நான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறேன்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காமன் க்ரவ், டபுள் பிராண்டட் க்ரவ், ப்ளூ டைகர்ஸ், எமிக்ரன்ட்ஸ், லைம் உள்ளிட்ட அரிய வகை பட்டாம்பூச்சிகள் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் கூட்டம் கூட்டமாகவலசை புறப்பட்டு கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தடையும்.
பின்னர் வட கிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னர் வலசையை முடித்துக் கொண்டு மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு செல்லும். இது செப்டம்பர் முதல் அக்டோபருக்குள் செல்லும்.
தற்போது, வலசை வந்த பட்டாம் பூச்சிகள் சேலம் மாவட்ட மலைப்பகுதிகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பயணத்தை தொடங்கியுள்ளதை காண முடிகிறது.
முன்கூட்டியே வலசையை முடிக்க காரணம் கடந்த ஆண்டுசேலம் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரிக்கும் கூடுதலாக பெய்தது. குறிப்பாக, மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போதும், கடந்த ஆண்டுபோல, ஏற்காடு உள்ளிட்ட மலைகளில் கனமழை பெய்துள்ளதால் வலசையை முடித்துக் கொண்டு முன்கூட்டியே பட்டாம்பூச்சிகள் புறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT