Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் மாதம் தோறும் - 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை :

தருமபுரி நகராட்சி பகுதியில் நடமாடும் தெருநாய்களை கருத்தடை மற்றும் தடுப்பூசி சிகிச்சைக்காக பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி குழுவினர்

சேலம் / தருமபுரி

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மாதம் தோறும் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடமிருந்து புகார்கள் வந்தன.

தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில், சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பாதுகாப்பாக பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். கருத்தடை செய்யப்பட்ட நாய்களை ஐந்து நாட்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் கொடுத்து கருத்தடை செய்யப்பட்ட விலங்கு என அடையாளப்படுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட பகுதியிலேயே விடப்படும்.

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக வாய்க்கால் பட்டறையில் குளிரூட்டப்பட்ட அறுவை சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தற்போது உள்ள வசதியின் அடிப்படையில் மாதத்துக்கு 120 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

வாரத்துக்கு 100 நாய்கள் என மாதத்துக்கு 400 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக நாய்கள் தங்கவைக்கும் அறைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிக்கப்பட்டு மாதம் தோறும் 400 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்தடை, தடுப்பூசி

தருமபுரி நகராட்சிப் பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவு சார்பில் கடந்த 2 நாட்களாக தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதுடன், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக 66 நாய்கள் பிடிக்கப்பட்டன. நகராட்சி ஆணையர் சித்ரா வழிகாட்டுதல் படி இந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவு ஆய்வாளர்கள் ரமண சரண், சுசீந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இப்பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். தருமபுரி நகராட்சி பகுதிகளில் நடமாடும் அனைத்து தெருநாய்களும் இவ்வாறு பிடிக்கப்பட்டு கருத்தடை மற்றும் தடுப்பூசி சிகிச்சை அளிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x