Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் - தி.மலை கிரிவல பாதையில் : காவல் துறையினர் குவிப்பு :

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்புவதற்காக தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவல் தொடங்கியதும், திருவண்ணா மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்தாண்டு பங்குனி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆவணி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, திருவண்ணா மலை பழைய அரசு மருத்துவ மனை, செங்கம் பிரிவு சாலை, அடி அண்ணாமலை, அபய மண்டபம் உட்பட கிரிவலப் பாதையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் நேற்று மாலையில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரிவலப் பாதையில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் மக்களின் விவரங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக் கின்றனர்.

மேலும், தடை உத்தரவை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், பவுர்ணமி நாளில் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபட முடியாததால் ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள், கரோனா தொற்று பரவல் முற்றிலும் ஒழிந்து, அண்ணாமலையாரை கிரிவலம் வந்து விரைவில் வழிபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

காவல்துறையினரின் பாதுகாப்பு இன்று இரவு வரை நீடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x