Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

தட்டப்பாறை- மீளவிட்டான் 2-வது இருப்பு பாதையில் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு :

தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து தட்டப்பாறை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய 2-வது இருப்பு பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். படம் : என்.ராஜேஷ்.

தூத்துக்குடி

மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை 160 கிலோ மீட்டருக்கு ரூ.11,822 கோடி மதிப்பில் இரட்டைவழி இருப்பு பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த தடத்தில் வாஞ்சி மணியாச்சி முதல் தட்டப்பாறை வரைமுடிவுற்றுள்ள பணிகளில் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், தட்டப்பாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 2-வது புதியஇருப்பு பாதையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று ஆய்வு செய்தார். இந்த இருப்பு பாதையில் 4 சிறிய பாலங்கள், மீளவிட்டான் அருகில் பெரிய மேம்பாலம், இடதுபக்க வளைவு இருப்பு பாதை, மின்சார வயர் கிராசிங், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாதை இணைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தட்டப்பாறை முதல் மீளவிட்டான் வரையிலான புதிய 2-வது இருப்பு பாதையில் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவடையும். அதன் பின்னர் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மீளவிட்டான் வரை ரயில்கள் இயக்கப்படும். மதுரை -தூத்துக்குடி வரையிலான புதிய 2-வது இருப்பு பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும்” என்றார்.

கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்த், ரயில் விகாஸ் நிகாம் முதன்மை திட்ட இயக்குநர் கமலாகர ரெட்டி, கட்டுமான முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x