Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகளுக்காக, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி பாளையம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன் நடந்தகலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்மெய்ய நாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும்3 ஆண்டுகளில் வெளிநாட்டு மரங்களை தடை செய்து, மனிதர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடிய வேப்பமரம், அரச மரம், பூவரசு போன்ற நாட்டு மரங்களை வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் நட்டுசுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளை யம்,பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக, சாயப்பட்டறை சங்கத்தினர் 3 திட்டங்களை அளித்துள்ளனர். இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தைப்பெற்று மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் உதவியுடன் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமையும்போது, கழிவுநீரை சுத்திகரித்து 90 சதவீதம் நீரை மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியும். ஈரோடு, திருப்பூர், பள்ளிபாளையம் பகுதிகளில் மட்டும் 2 லட்சம் டன் சாயக்கழிவுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் 9 லட்சம் டன் கழிவுகள் இருப்பில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இதனை அகற்றுவது குறித்து ஐஐடி போன்ற நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்ட குழுவைக் கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளை பச்சை அட்டவணையில் இருந்து வெள்ளை அட்டவணைக்கு மாற்றக்கோரி உள்ளனர்.கோழிப்பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஈக்கள் தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து ஆராய குழு அமைப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தரை கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.900 கோடிசெலவு செய்துள்ளனர். ஆனால் அவற்றில்5 லட்சம் மரக்கன்றுகளைக் கூட பராமரிக்காமல் விட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன், நகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்,பரமத்திவேலூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT