Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 439-வது ஆண்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு 439-வது பெருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது. கரோனா ஊரடங்கால் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி இத்திருவிழா நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்துஒவ்வொரு நாளும் பேராலயத்துக்குள் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பனிமயஅன்னையை வழிபடும் வகையில் இந்நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பெருவிழா திருப்பலி
காலை 7.30 மணிக்கு ஆயர்ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை குமார் ராஜாஉள்ளிட்ட பல்வேறு அருட்தந்தையர்கள் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றினர்.
காலை 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் தலைமையிலும், 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மட்டும் இதில் பங்கேற்றனர்.
சப்பர பவனி ரத்து
பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் அனைத்து சாலைகளிலும் போலீஸார் தடுப்புகள் வைத்திருந்தனர். எஸ்பி ஜெயக்குமார் மேற்பார்வையில் டிஎஸ்பி கணேஷ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT