Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
சேலம் சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாதர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 24 முக்கிய கோயில்களில் நேற்று சிறப்பு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களை முறையாக பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட கோயில்களில் முழுமையான சிறப்பு சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பணி நேற்று (2-ம் தேதி) தொடங்கி 4-ம் தேதி வரை நடக்கிறது. இப்பணியின்போது கோயில் வளாகம் முழுவதும் குப்பை அகற்றுதல், ஒட்டடை நீக்குதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
சேலம் மண்டல இந்து சமயஅறநிலையத்துறைக்கு உட்பட்ட சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம்சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாதர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில்,தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களில் நேற்று சிறப்பு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதேபோல, சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 கோயில்களிலும் இப்பணி தொடங்கியது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறும்போது, “கோயில்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தற்போதுசுத்தம் செய்யும் பணிக்கு கூடுதல்முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் கோயில்களை சுத்தம் செய்து அதுதொடர்பான புகைப்படத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT