Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

திண்டுக்கல்லில் மது போதையில் இருந்த - அண்ணனின் மொபைல் போனை பாதுகாக்க முயன்ற தம்பிக்கு அடி :

திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த அண்ணனின் மொபைல் போனை பாதுகாக்க அவரது பையில் இருந்து எடுத்து பத்திரமாக வைக்க முயன்ற தம்பியை பயணிகள் திருடன் என நினைத்து தர்ம அடி கொடுத்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், போதை நபரின் சட்டைப் பையில் இருந்த மொபைல் போனை எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த பயணிகள், போதை நபரிடம் இருந்து மொபைல் போனை திருடுகிறார் எனக் கூறி அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதை அங்கிருந்த சிலர் அவர்களது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தனர்.

அந்த இளைஞர், எதற்காக அடிக்கிறீர்கள்? எனக் கேட்க, ‘போதை நபரின் சட்டைப் பையில் இருந்து மொபைல் போனை ஏன் திருடினாய்? என்று அவரை அடித்தவர்கள் கேட்டனர்.

‘நான் திருடன் இல்லை. மது போதையில் இருப்பவர் எனது அண்ணன். மொபைல் போன் கீழே விழுந்து காணாமல் போக வாய்புள்ளதால் பத்திரமாக எடுத்து நான் வைத்துக் கொண்டேன்’ எனக் கூறி உள்ளார். இருப்பினும் பொதுமக்கள் நம்பவில்லை. தொடர்ந்து அந்த இளைஞரை அடித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் போதை நபரிடம் விசாரித்தபோது, திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அடி வாங்கியவர் போதை நபரின் தம்பி சதீஷ் எனத் தெரிய வந்தது.

பின்னர் தனது அண்ணன் அம்ஜத்தை கைத்தாங்கலாக சதீஷ் அழைத்துச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x