Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் - உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்படும் : செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியம் படியூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிகளில் ரூ.65.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரூ.2.43 கோடி மதிப்பில் காங்கயம் - முத்தூர் பிரிவில் சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்டவற்றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புதிய வளர்ச்சிதிட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் படியூரில் அண்ணாநகர் ஆதிதிராவிடர் காலனி முதல் வலையக்காரன் தோட்டம் வரை செல்லும் மண் சாலையை, ஓரடுக்கு கப்பி சாலையாக ரூ.30.10 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், கணபதிபாளையத்தில் ஒட்டப்பாளையம் கோயமேடு முதல் சிவகிரி புதூர் வரை செல்லும் மண் சாலையை ரூ.35 லட்சம்மதிப்பில் ஓரடுக்கு கப்பி சாலையாகதரம் உயர்த்தப்பட உள்ளது.

கிராம சாலைகளை தரம் உயர்த்துவதன் மூலமாக விவசாயிகள், பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். காங்கயம் - முத்தூர் பிரிவில் இரண்டு வழிச்சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை எண்:67-ஐ,புதிய நான்கு வழிச்சாலையாக மாற்றுவதன் மூலமாக, அப்பகுதியில் விபத்துகள் குறையும். இதனால்நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், கோவை, மேட்டுப்பாளையம், உதகை, கூடலூர், மைசூரு ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக செல்ல பயனுள்ளதாக இருக்கும்" என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், காங்கயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன், காங்கயம் அரசு மருத்துவமனை, சாவடிபாளையம், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x