Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

ஜூலை 31-ம் தேதி வரை - 10.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அதை ஆட்சியர் கார்மேகம் தொடக்கி வைத்தார். உடன் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி வரை 10 லட்சத்து 83 ஆயிரத்து 203 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் கரோனா விழிப்புணர்வு வாரம் நேற்று (1-ம் தேதி) முதல் வரும் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார வாகனத்தை நேற்று ஆட்சியர் கார்மேகம் தொடங்கிவைத்தார். சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தொடர்ந்து, கரோனா விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் சுப்பிரமணி (சேலம்), செல்வகுமார் (ஆத்தூர்), மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை 10,83,203 பேருக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 69 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்காக 69 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும் கரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்று தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மொத்தம் 21 ஆயிரத்து 500 டோஸ் வந்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 138 தடுப்பூசி மையங்களில், இன்று (2-ம் தேதி) பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவேக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால், இன்று கோவேக்சின் தடுப்பூசி போட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x