Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM
பாபநாசம் அருகே கொள்முதல் நிலையத்துக்கு வியாபாரி கொண்டு வந்த 32 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டு, கொள்முதல் நிலைய பணியாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து, வாரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி காலை கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் வந்தபோது, அங்கு அதிகளவிலான நெல்மணிகள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த விவசாயிகள், அவை யாருடையது என கேட்டபோது, அதுகுறித்து ஊழியர்கள் யாரும் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 31,980 கிலோ நெல்மணிகளை (780 மூட்டைகள்) பறிமுதல் செய்து, பிள்ளையார்பட்டியில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, துறை ரீதியாக விசாரணை நடத்தி, கொள்முதல் அலுவலர் அழகர்சாமி, பட்டியல் எழுத்தர் வி.முருகானந்தம், உதவியாளர் ஏ.ராஜேஷ், காவலர் எல்.வாசுதேவன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கடந்த 27-ம் தேதி உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, கடந்த 4 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊழியர்களுக்குப் பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பணியில் சேர்ந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்வார்கள்” என்றனர்.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் என்ற பெயரில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திருட்டுத்தனமாக நெல்லை விற்பனை செய்வதாக புகார்கள் வரப்பெற்றன.
அதனடிப்படையில், நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி பகுதியில் கோட்டாட்சியர் நடத்திய ஆய்வில், வெளிமாவட்ட வியாபாரிகள் 3 லாரிகளில் கொண்டுவந்த 73 டன் நெல் மூட்டைகள் லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT