Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி : கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முதியோருக்கு கூடுதலாக பென்ஷன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் தேனீ.ஜெயகுமார், ஆறுமுகம் எம்எல்ஏ உள்ளிட்டோர்.

கடலூர்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிகளை கடலூர் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு உட்பட்டபகுதியில் நீர்வள, நிலவளத்திட்டத்தின் மூலம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் பாசனப்பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணைக்கரையில் வடக்குராஜன் வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு பாசன வாய்க்கால்கள் கரைகள்பலப்படுத்தப்பட்டு வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடை பெற்றுள்ளதையும் பார்வையிட்டார். இதை தொடர்ந்து ஆதனூர் கிராமம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 396.41 கோடி மதிப்பீட்டில் தலை மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்பகோணம்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வீராணம் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கை குறித்து அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்கவும், பணிகள் புதிதாக மேற்கொள்ள திட்ட மதிப்பீடுகள் விரைந்து தயார் செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், அணைக்கரை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவிப்பொறியாளர்கள் முத்துக்குமரன், வெற்றி வேல்,ஞானசேகர் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x