Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி - சேலம் உட்பட 5 மாவட்டங்களில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் :

சேலம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இல்லத்தின் முன்பு அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் ஜங்ஷனில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலும், அமானி கொண்டலாம்பட்டியில் எம்எல்ஏ ராஜமுத்து தலைமையிலும், பாரப்பட்டி ஊராட்சி மேச்சேரியம்பாளையத்தில் முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், மாவட்ட பொருளாளர் காளியப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையிலும், பெருந்துறையில் எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலும், வீரப்பன்சத்திரத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு தலைமையிலும், சூரியம்பாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு முன்னாள் துணை மேயர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராமசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் எம்பி செல்லகுமார சின்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி அதிமுக அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி 4 ரோட்டில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சிங்காரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூரில் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையிலும், மேலும், மாவட்டத்தில் 20 ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரே எம்எல்ஏ., அசோக்குமார் தலைமையிலும், கிருஷ்ணகிரி சென்னை சாலையில் மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கமுத்து தலைமையிலும், பர்கூரில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓசூர்

ஓசூரில் மாநகர அதிமுக சார்பில் மாநகர செயலாளர் நாராயணன் தலைமையில் ரயில் நிலையம் எதிரிலும், கெலமங்கலத்தில் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் ஹசின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x