Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

ஊராட்சிகளின் நிதியை செலவிட்டதில் குளறுபடி : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். அருகில், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர்.

சிவகங்கை

அதிமுக ஆட்சியின்போது ஊராட்சி களின் நிதியை செலவிட்டதில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

பெண்கள் வன்கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மனநல ரீதியான ஆலோசனைகளைப் பெறவும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் ரூ.48 லட்சத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ரூ.1 கோடிக்கு மேல் வருமானமுள்ள ஊராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தல் நடத்தப்படும். கடந்த கால ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சீரமைப்பு என்ற பெயரில் சீரழிவுகள் நடந்துள்ளன. வார்டுகள் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சீர்செய்யப்பட்டு நகர்ப்புறங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும். கடந்த காலங்களில் ஊராட்சிகளின் நிதியை செலவிட்டதில் சில குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. ஊராட்சி நிதியை மடைமாற்றம் செய்துள்ளனர். கடந்த கால தவறுகள் தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x